Last Updated:
தனது எல்லைகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் துல்லியமாக தாக்கியுள்ளது. ஈரானின் ஏவுகணைகளின் வரம்பு 2,000 கிலோ மீட்டர்தான் என கூறப்பட்ட நிலையில், இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பை பயன்படுத்தி தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னை சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரானுக்கு எதிராக 12 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன. மேலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளமான டீகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, தனது எல்லைகளில் இருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் துல்லியமாக தாக்கியுள்ளது.
ஈரான்
ஈரானின் ஏவுகணைகளின் வரம்பு 2,000 கிலோ மீட்டர்தான் கூறி வந்த நிலையில், 4,000 கிலோ மீட்டருக்கு தாக்குதல் நடத்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து அபு மூசா மற்றும் கிரேட்டர் டன்ப் தீவுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, கனடா ஆகிய 7 நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கு தென்கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஐ.நா. உதவும் என்று அதன் தலைவர் அன்டோனியா குட்டரேஸ் கூறியுள்ளார்.
“அப்படி நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஈரான் எச்சரிக்கை!


