அபுதாபி | மார்ச் 28, 2026
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபி நகரை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை அமீரக வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தச் சம்பவத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத் தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்: இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஈரான் ஏவிய துல்லியமாக இலக்கைத் தாக்கும் ‘கிரூஸ்’ ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை அமீரக வான் பாதுகாப்புப் படை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.
அபுதாபியின் கலிபா பொருளியல் மண்டலத்தை (KEZAD) நோக்கிப் பாய்ச்சப்பட்ட அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ஏவுகணையையும் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக வீழ்த்தியது.
ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட போதிலும், சிதறிய அதன் பாகங்கள் தொழிற்சாலைப் பகுதியில் விழுந்ததால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அபுதாபி தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5 இந்தியர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த இந்தியர்களுக்கு லேசானது முதல் மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமீரக அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அமீரகத்தின் வான் எல்லை மற்றும் முக்கியப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தற்காப்பு அமைச்சு உறுதி அளித்துள்ளது.




