Last Updated:
குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் ஷுப்மன் கில் அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேற்று குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஷுப்மன் கில் அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 51ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்களும், பட்லர் 37 பந்துகளில் 64 ரன்களும், சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில், ஹெட், இஷான் கிஷன் ஆகியோர் பெரிதும் சோபிக்காமல் பெவிலியன் திரும்பிய நிலையில், அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி வந்தார். அப்போது, பிரஷீத் கிருஷ்ணா வீசிய 14ஆவது ஓவரில் பந்து அபிஷேக் சர்மாவின் காலில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது.
அப்போது குஜராத் அணியின் சார்பில் எல்.பி.டபள்யூ கோரப்பட்டது. ஆனால் அது “அம்பயர்ஸ் கால்” என்ற விதியின் மூலம் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில், அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மைதானத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது ஷுப்மன் கில்லின் சிறுவயது நண்பரான அபிஷேக் சர்மா வந்து ஷுப்மன் கில்லை தடுத்தார். இருந்தும் கில் அம்பயர்களுடன் வாக்குவாதத்தை நிறுத்தவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு கில் சமாதானமானார்.
ஆனால் காயம் ஏற்பட்ட அபிஷேக் சர்மா, பிசியோவிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் போட்டி தொடங்க சற்று தாமதமானது. அப்போது ஷுப்மன் கில் வந்து விளையாட்டாக அபிஷேக் சர்மாவை உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
Ahmedabad,Gujarat
May 03, 2025 10:28 AM IST


