விகாஸ் டி நாஹரின் ஆரம்ப வாழ்க்கை: 1984 இல் மண்டையா மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் விகாஸ். இவருடைய ஆரம்ப வாழ்க்கை முழுக்க முழுக்க விவசாயத்தைச் சார்ந்ததாகவே இருந்துள்ளது. விகாஸின் அப்பாவான தன்மால் நாஹர் என்பவர் காபி கொட்டைகள் மற்றும் மிளகு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். இதனால் விவசாயம் பற்றிய ஆழமான ஒரு புரிதல் விகாஸுக்கு எப்பொழுதுமே இருந்தது.
விகாஸினுடைய வெற்றிப் பயணம் எவ்வாறு ஆரம்பித்தது?: விகாஸ் உடன் பிறந்தவரான விரேந்திரா ஏற்கனவே ‘சாத்விக் ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதுவே இந்த உணவுத் தொழிலில் நுழைய வேண்டும் என்பதற்கான ஊக்கத்தை விகாஸுக்கு அளித்துள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஜெயின் குழுமத்தில் ஒரு சீனியர் இம்போர்ட் மேனேஜராகத் தன்னுடைய கெரியரை விகாஸ் ஆரம்பித்தார். எனினும், தன்னுடைய ஆர்வம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு, MBA டிகிரியில் மார்க்கெட்டிங் பயில ஆரம்பித்தார். இதுவே உணவுத் தொழிலில் அவருடைய பயணத்திற்கான முதல் துவக்கமாக அமைந்தது.
உடனடியாகத் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, சிம்பயாசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் தன்னுடைய MBA படிப்பை முடித்தார். அதன் பிறகு, சாத்விக் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக மாறினார். அதே நிறுவனத்தில் தொடர்ந்து அவருடைய சகோதரரும் வேலை செய்து வந்தார். எனினும், நிலையான மற்றும் நல்ல சம்பளம் வழங்கும் இந்தக் கார்ப்பரேட் வேலை இருந்த போதிலும், விகாஸுக்கு ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்துள்ளது. தனக்கான ஒன்றைத் தானே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்தது.
20 முறை தோற்ற பிறகும் விடாமுயற்சியோடு இருந்த விகாஸ்: விகாஸ் தன்னுடைய புதிய தொழில் யோசனைகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் முதலீட்டாளர்களால் தொடர்ந்து 20 முறை நிராகரிக்கப்பட்டார். எனினும், இந்தத் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக அமைத்து, தன்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்தார். ‘தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வதே வெற்றிக்கான திறவுகோல்” என்று நாஹர் ஒரு நேர்காணலில் கூறினார். முதலீட்டாளர்களைப் பெற இயலாத காரணத்தால், தனக்கான பணத்தைத் தானே முதலீடு செய்யலாம் என முடிவு செய்தார் விகாஸ்.
Happilo நிறுவனத்தை விகாஸ் எப்படி அமைத்தார்?: அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, விகாஸ் Happilo என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று இந்த நிறுவனமானது 40-க்கும் மேற்பட்ட டிரை ஃப்ரூட்ஸ், 60 மசாலாப் பொருட்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சாக்லெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. Happilo ப்ராடக்டுகள் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களிலும், இந்தியா முழுவதும் உள்ள ரீடைல் கடைகளிலும் கிடைக்கிறது. இப்போதைக்கு இந்த நிறுவனத்தின் மதிப்பு 500 கோடியாக உள்ளது.
விகாஸ் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபர் மட்டுமல்லாமல், பன்மொழி தெரிந்த ஒரு நபராகவும் இருக்கிறார். இவரால் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடா, மார்வாரி மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளைச் சரளமாகப் பேச முடியும். இதன் மூலமாக முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் எளிதாக இணைவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய இந்தச் சாதனைகள் Forbes and Times இல் ‘40 under 40’ பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.
விகாஸ் டி நாஹர் உடைய இந்தப் பயணம் விடாமுயற்சி, கடுமையான உழைப்பு மற்றும் புதுமை வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக அமைகிறது. சிறிய கிராமத்தில் இருந்து 500 கோடி ரூபாய் நிறுவனத்தை அமைப்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே, சரியான நோக்கமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்த ஒரு விஷயத்தையும் நிச்சயமாகச் சாதிக்கலாம்.
June 15, 2025 5:05 PM IST

