ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த சப்ரி, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மௌனம் காக்க வேண்டியதில்லை
சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்புக்கு மரியாதை அளிப்பதற்கு, நியாயமற்ற தண்டனைகளை எதிர்கொண்டு மௌனம் காக்க வேண்டியதில்லை, என்றும் சப்ரி தெரிவித்துள்ளார்.
புண்படுத்தும் சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிப்பது வரம்பு மீறிய செயல் என்று விவரித்த அவர், இதுபோன்ற ஒரு செயலுக்கு மரண தண்டனை விதிப்பது மிகவும் விகிதாச்சாரமற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவராசா சில நிமிடங்களிலேயே அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, பகிரங்கமான காணொளி மன்னிப்பு ஒன்றை வெளியிட்டதாக வந்த செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சப்ரி கூறியுள்ளார்.
“ஒரு முஸ்லிமாக, நான் அல்லாஹ்வின் கருணையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நாம் அவனை அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்பாளனாகவும் போற்றுகிறோம். மனிதத் தவறுகளுக்கு நாம் பதிலளிக்கும் விதத்திலும் அந்த விழுமியங்களே வழிகாட்ட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

