Last Updated:
கடலூரில் பள்ளி வேன் விபத்தையடுத்து, ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்கள், தானியங்கி இண்டர்லாக் அமைப்புகள் உடனடியாக பொருத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளில் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்த விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ரயில்வே கேட்களை 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
July 10, 2025 7:35 AM IST