ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் ஆரம்பிக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உள்ள மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களம் காண உள்ளது. இருப்பினும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு இருப்பது சற்று விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இளம் வீரர்களையும், அனுபவ ஆட்டக்காரர்களையும் கொண்டதாக இந்திய அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகள் பலவற்றில் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.
அவர்களுடன் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வீரர்களும் அணியில் உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை டி20 கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்துள்ளன. 20 ஓவர் போட்டிகளில் பௌலர்களால் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கின்றனர். நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனக்கு மட்டும் இல்லாமல், எல்லா அணிகளிலும் உள்ள பேட்ஸ்மன்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா ஓர் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதுகிறேன் என கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
