வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் அறிவித்த வரி செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அனைத்துலக நாடுகள் மீது 10% வரியை விதிக்கப்போவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றபோதும், வெள்ளை மாளிகையின் குறிப்பேடு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று சுட்டியது.
மேலும் இந்த கூடுதல் வரிகளால் உலக நாடுகள் மீதான பொருளியல் நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பதிலடி தரும் என்று அனைத்துலக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
வரி விதிப்பு சார்ந்த அம்சங்கள் எல்லாம் நாடாளுமன்றம் கையாள வேண்டிய அம்சம், இதில் அதிபருக்கு அதிகாரம் இல்லை; நாடாளுமன்ற அவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில்தான் தெளிவுப்படுத்தியிருந்தது.
இதற்கிடையே இத்தீர்ப்பு குறித்து வேதனைப்படுவதாக சொன்ன அதிபர் டிரம்ப், அதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அமெரிக்க நீதிபதிகளின் கருத்துகள், அவர்கள் இதனை அணுகிய விதம் அவர்கள் இதரத் தலையீடுகளால் சூழப்பட்டு பொருத்தமில்லா தீர்ப்பை வழங்க வழிவகுத்தது என்று சாடியிருந்தார் டிரம்ப்.
எனினும் தீர்ப்பு வந்தவுடன் சற்றும் எதிர்பாரா வகையில் உலக நாடுகள் மீது பொருள் சார்ந்த வரியை கூடுதலாக சுமத்தியிருக்கிறார் டிரம்ப்.
இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று கருத்துரைத்துள்ளார்.




