Last Updated:
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் ரகசிய கேமராவுடன் ஒருவர் நுழைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பத்மநாப சுவாமி கோயிலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், சமீபத்தில் ரகசிய கேமராவுடன் கோயிலுக்குள் நுழைய முயன்ற நபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த உயர் பாதுகாப்பு கொண்ட கோயிலுக்குள் ஸ்மார்ட் கண்ணாடி வடிவில் உள்ள ரகசிய கேமராவுடன் பக்தர் ஒருவர் சென்ற சம்பவம் கோயில் ஊழியர்களையும், பாதுகாப்புப் பணியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த சுரேந்திர ஷா என்ற 66 வயது முதியவர், தனது மனைவி, சகோதரி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன், சமீபத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய சென்றிருந்தார். ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்த சுரேந்திர ஷா கோயிலுக்குள் நுழைய முயன்றார். அவர் கோயிலுக்குள் நுழையும்போது, அவரது கண்ணாடியிலிருந்து ஒரு வெளிச்சம் வருவதை பாதுகாப்புப் பணியாளர்கள் கவனித்தனர்.
இதனையடுத்து உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் பணியாளர்கள் சோதனை செய்தனர். இந்த சோதனைகளின்போது, ஸ்மார்ட் கண்ணாடிகளில் ஒரு ரகசிய கேமரா இருப்பதைக் கண்டுபிடித்தனர். விரிவான பரிசோதனையில், அவர் மெட்டா கண்ணாடிகளைப் பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன் விளைவாக, போலீசார் அவர் மீது கோயில் விதிகளை மீறியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 223இன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயிலுக்குள் சுரேந்திர தனது ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி சில காட்சிகளை படம்பிடித்ததை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் இந்தக் காட்சிகள் காவல்துறையினரின் முன்னிலையில் நீக்கப்பட்டன.
மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, குடும்பத்துடன் குஜராத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் மகா கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 270 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேகத்துடன், 300 ஆண்டுகள் பழமையான விஷ்வக்சேனரின் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது மற்றும் வளாகத்திற்குள் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் அஷ்டபந்த கலச விழாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
July 09, 2025 9:57 PM IST


