Last Updated:
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்தது தவறு என ஒப்புக்கொண்டார்.
பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நிதியளிப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்ட பேச்சு கவனம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. மேலும், சார்க் கூட்டமைப்பு நாட்டினருக்கான விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பயங்கரவாத செயல்கள் தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு அளித்த நேர்காணலின்போது “பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா, “3 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்காக இதைச் செய்தோம். இங்கிலாந்துக்காகவும் இந்த மோசமான வேலையை பாகிஸ்தான் செய்தது. அது தவறு. பாகிஸ்தான் இந்த தவறால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சோவியத் – ஆப்கானிஸ்தான் போரின் போதும் சரி, 9/11-க்குப் பிறகு தலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின்போதும் சரி மேற்கத்திய நாடுகளுடன் பாகிஸ்தான் அரசு இணைந்து செயல்பட்டிருக்காவிட்டால் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் இருந்திருக்கும்” என்று கூறினார். பாகிஸ்தான் அமைச்சரின் இந்தப் பேச்சு, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்காக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நிதி அளிக்கிறது என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 25, 2025 9:17 PM IST


