ஜலஜ் சக்சேனா என்ற கிரிக்கெட் வீரர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 38. ரஞ்சியில் இப்போது மகாராஷ்டிராவுக்கு ஆடுகிறார். இவர் ஒரு ஆல்ரவுண்டர். பவுலிங்கில் ஆஃப் பிரேக் வீசுபவர். இவர் சென்ட்ரல் சோன், கேரளா, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மத்திய பிரதேசம், இந்தியா ஏ, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளில் இருந்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் 484 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு இன்னிங்சில் 68 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 150 முதல் தரப் போட்டிகளில் 7,060 ரன்களை 14 சதங்கள் 34 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 109 ஆட்டங்களில் 2,056 ரன்களை 3 சதங்கள் 7 அரை சதங்களுடன் எடுத்ததோடு பவுலிங்கில் 123 விக்கெட்டுகளையும் ஒரு இன்னிங்சில் அதிகபட்சம் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
நேற்று மகாராஷ்டிரா அணிக்கும் கேரளா அணிக்கும் இடையிலான எலைட் குரூப் பி ரஞ்சி போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இதில் ஜலஜ் சக்சேனா 49 ரன்களை எடுத்தார். ஜலஜ் சக்சேனா இறங்கும்போது வர்ணனையில் இருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான சலைல் அங்கோலா மற்றும் சேத்தன் சர்மா. இவர்கள் முன்னாள் வீரர்கள் மட்டுமல்ல, அணித் தேர்வாளர்களாகவும் இருந்தவர்கள். குறிப்பாக சேத்தன் சர்மா தேர்வுக்குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
ஜலஜ் சக்சேனா இறங்கும்போது இருவரும் பேசிக்கொண்ட போது, ஜலஜ் சக்சேனா இந்தியாவுக்கு ஆடாமல் போனது ஏன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார் சலைல் அங்கோலா. அதற்கு சேத்தன் சர்மா, ‘சலைல் நீங்கள் ‘ஆச்சரியம்’ என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதுதான் எனக்கு ஆச்சரியம், ஒன்று சொல்லட்டுமா நாம் இருவருமே ஒரு காலத்தில் அணித்தேர்வாளர்கள்’ என்றார் சிரித்தபடியே.
அப்போது சலைல் அங்கோலா, சேத்தன் சர்மாவை நோக்கி, ‘நீங்கள் தேர்வுக் குழுத் தலைவர்’ என்றார். உடனே சேத்தன் ஜலஜ் சக்சேனா இந்தியாவுக்கு ஆடாததற்கு நம் இருவர் மீதுமே குற்றம்சாட்டி விரல்கள் நீட்டப்படும் என்று கூறி அந்த உரையாடலை முடித்து வைத்தார்.
இருவரும் தமாஷாகக் கூறியிருக்கலாம், ஆனால் உடனே நெட்டிசன்கள் அங்கோலா, சேத்தனுக்கு பாடம் எடுக்குமாறு சேத்தன் சர்மா 2020 முதல் 2024 வரை தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார். அப்போதும் கூட ஜலஜ் சக்சேனா உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாகவே ஆடிவந்தார், ஆனால் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று விஷயஙக்ளைப் புட்டுப் புட்டு வைத்தனர்.
ரஞ்சி வரலாற்றில் ஜலஜ் சக்சேனா கடந்த சீசனில் 6,000 ரன்கள் 400 விக்கெட்டுகள் என்ற ‘டபுள்’ மைல்கல்லை எட்டிய முதல் ரஞ்சி வீரர் என்று வரலாறு படைத்தார்.
ஒரு வீரரை செலக்ஷன் கமிட்டியில் இருந்த போது கண்டுகொள்ளாமல் வர்ணனையில் வந்து தமாஷாக அங்காலய்த்ததை என்னவென்று கூறுவது, இந்திய அணித்தேர்வு என்னும் வரலாற்று வேதனையையா அல்லது நேர்மையாக இவர்கள் ஒப்புக் கொண்டதையா? என்னவென்று சொல்வது?