அமெரிக்க அதிபர் டிரம்பும் – உலகப் பெரும் கோடீஸ்வரரான மஸ்க்கும் மோதிக்கொள்வதால், நாசாவிற்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்பும் மஸ்க்கும் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட போது, எலான் மஸ்க் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் விண்கலத்தைத் திரும்பப் பெறும் எனப் பதிவிட்டார். எலான் மஸ்க் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறாரா என்பது தெரியாவிட்டாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தை உயிர்ப்புடன் வைப்பதில் டிராகன் விண்கலம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இது மட்டுமல்லாமல், நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் டிராகன் விண்கலம் தேவைப்படுகிறது.
2006 ஆம் ஆண்டு மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பொருட்களை அனுப்பும் ஒப்பந்தம் கிடைத்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மஸ்க், 2012- ஆம் ஆண்டு முதல் தனது ஃபால்கன் ராக்கெட்டுகள் மூலம் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு அனுப்பினார்.
ஓபாமா ஆட்சியின் போது, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஒப்பந்தமும் மஸ்கிற்கு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது அதிபர் டிரம்ப் ஆட்சியில் தான். பின்னர் Blue Origin, Rocket Lab, Boeing, Lockheed Martin, Virgin Galactic உள்ளிட்ட விண்வெளித்துறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனங்களைப் படிப்படியாக ஓரங்கட்டியது ஸ்பேஸ் எக்ஸ்.
இதன் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல நாசா, எலான் மஸ்க்கை மட்டுமே நம்பியுள்ளது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள 4 வீரர்களையும் டிராகன் பூமிக்குக் கொண்டு வந்து விடும். ஆனால் டிராகன் இல்லாமல் புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.
தற்போது அமெரிக்காவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டுமே மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. அந்நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் நான்கு பேர் பயணிக்கலாம். போயிங்கின் ஸ்டார்லைனரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பி வந்தது.
ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் 9 மாதங்கள் கூடுதலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களையும் டிராகன் விண்கலமே பூமிக்குத் திரும்ப அழைத்து வந்தது.
டிராகனைத் தவிர்த்து ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. 3 பேர் பயணிக்கக் கூடிய இந்த சோயுஸ் விண்கலத்தில், வழக்கமாக 2 ரஷ்யர்களும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரும் பயணம் செய்வார்கள். டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்யரும் 3 அமெரிக்கர்களும் பயணிப்பார்கள். ஆனால் சோயுஸ் விண்கலத்தில் பயணிக்க பல மில்லியன் டாலர்களை அமெரிக்காவின் நாசா செலவு செய்ய நேரிடும்.
June 08, 2025 8:02 AM IST
அதிபர் டொனால்ட் டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்..! இடையில் பாதிக்கப்படும் நாசா – எப்படி தெரியுமா?

