Last Updated:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்று மகுடம் சூடியது.
கடந்த 18 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு இருந்த கோப்பையின் வேட்கை நேற்று தீர்ந்தது என்றே சொல்லலாம். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை அடுத்து விராட் கோலி ஆனந்தக் கண்ணீரை விட்டார். தனது மகிழ்ச்சியை சக அணி வீரர்களிடமும், மனைவி அனுஷ்கா சர்மாவிடமும் பகிர்ந்துகொண்ட அவர், ஆர்சிபி அணி ரசிகர்களின் கோப்பைக் கனவை 18 ஆண்டுகள் அதே அணியில் இடம்பெற்று நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
இந்தப் போட்டியை அடுத்துப் பேசிய விராட் கோலி, “இந்த வெற்றி எந்த அளவு ஆர்சிபி அணிக்குச் சொந்தமானதோ அதே அளவு ரசிகர்களுக்கும் சொந்தமானது. நான் என்னுடைய இளமைகாலம், அனுபவம் மற்றும் எனது உச்சத்தையும் கொடுத்திருக்கிறேன்.
இந்தக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தையும் நான் கொடுத்திருக்கிறேன். இந்த நாள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. கடைசி ஓவரில் 2 பந்துகள் முடிந்த பிறகு, எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. 18 ஆண்டுகள் நான் இந்த அணிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன். எந்த நிலை வந்தாலும், இந்த அணியுடனே நான் இருந்துள்ளேன். அவர்களும் என்னுடன் இருந்தார்கள்.
என்னுடைய இதயம் எப்போதும் பெங்களூரு அணியுடன் தான் இருக்கும். நான் ஐபிஎல் விளையாடும் வரை இந்த அணிக்குத் தான் விளையாடுவேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் என்பது மற்ற பணிகளைப் போல நீண்ட நாட்கள் செய்யக்கூடியது அல்ல. அதற்கான உடற்தகுதி தேவை. அது குறித்துப் பேசிய விராட் கோலி, “நான் அதிக ஆண்டுகள் கிரிக்கெட்டை விளையாட முடியாது. அனைவருக்கும் ஒரு இறுதி நாள் உண்டு. நான் இந்த கிரிக்கெட்டை விட்டுச் செல்லும்போது, நான் வீட்டில் அமர்ந்து, ‘நான் என்னிடம் இருந்த அனைத்தையும் இதற்காகக் கொடுத்துவிட்டேன்’ எனக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Ahmedabad,Gujarat
June 04, 2025 7:30 AM IST


