Last Updated:
2023-24 நிதியாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில், மதிப்பில் மகாராஷ்டிரா, தொழிற்சாலை எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலை.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டிலும் அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் நீடிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்த மதிப்பு கூட்டுதலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15 புள்ளி நான்கு மூன்று விழுக்காடு தமிழ்நாட்டில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே போன்று, உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு முதலிடத்தில் நீடிக்கிறது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக உற்பத்தித் துறையில் பணியாற்றுபவர்களில், 15 புள்ளி இரண்டு நான்கு விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய பட்டியலில் தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
August 28, 2025 11:22 AM IST


