Last Updated:
சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், உங்கள் வருமானம் நீங்கள் விண்ணப்பித்த கடன் தொகைக்கு ஏற்றவாறு இல்லை என்றால், கடன் வழங்குபவர் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடும்.
கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் உடனே கடன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் சிலருக்கு 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், பெரும்பாலான கடன் வழங்குநர்கள் அவர்களது விண்ணப்பங்களை நிராகரிக்கிறார்கள். ஏனென்றால் வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்பு பல்வேறு காரணிகளைப் பார்க்கிறார்கள். அவற்றில் சில உங்களது சிறப்பான கடன் வரலாற்றையும் முறியடிக்கக்கூடும்.
சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், உங்கள் வருமானம் நீங்கள் விண்ணப்பித்த கடன் தொகைக்கு ஏற்றவாறு இல்லை என்றால், கடன் வழங்குபவர் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடும். உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் ஏற்கனவே இஎம்ஐ-களுக்குச் செல்கிறது என வங்கிகள் உங்கள் கடன்-வருமான விகிதத்தைக் கணக்கிடுகின்றன. இவை அதிகமாக இருந்தால், ஏற்கனவே நீங்கள் அதிகமாக கடன் செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என அவர்கள் முடிவு செய்யலாம்.
கடன் வழங்கும் வங்கிகள் ஒருவரின் பணி ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் சமீபத்தில் வேலைகளை மாற்றியிருந்தாலோ, ஒப்பந்தத்தில் பணிபுரிந்திருந்தாலோ அல்லது ஒழுங்கற்ற வருமானத்துடன் சுயதொழில் செய்பவராக இருந்தாலோ, உங்கள் கடன் சுயவிவரம் ஆபத்தானதாகத் தோன்றலாம். சில வங்கிகள் சில துறைகளில் சம்பளம் வாங்கும் விண்ணப்பதாரர்களையோ அல்லது நீண்ட வேலைவாய்ப்பு வரலாற்றைக் கொண்ட நிறுவனங்களையே விரும்புகின்றன.
நீங்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினாலும், அதிக அளவில் கடன்கள் இருப்பது ஆபத்தை விளைவிக்கும். பல இஎம்ஐ உங்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தைக் குறைத்து, கடன் வழங்குபவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம். மற்றொரு கடனை எப்படி திருப்பிச் செலுத்துப்போகிறீர்கள் என உங்கள் திறனைப் பற்றி அவர்கள் கவலைப்படலாம்.
தவறான பான் கார்டு விவரங்கள், வெவ்வேறு விதமான கையொப்பங்கள் அல்லது காலாவதியான முகவரி ஆவணங்கள் போன்ற நிர்வாக காரணங்களுக்காகவும் கடன் நிராகரிக்கப்படலாம். சிறிய வேறுபாடுகள் கூட கடன் ஒப்புதல்களை தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம். உங்கள் KYC ஆவணங்களைச் சரிபார்த்து, அவை கிரெடிட் பியூரோவிடம் வழங்கப்பட்டுள்ளவற்றுடன் சரியாக இருப்பதை உறுதிசெய்யவும்.
ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த கடன் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. சில குறிப்பிட்ட வயதினருக்கு, தொழில்களுக்கு அல்லது துறைகளுக்கு கடன் வழங்குவதை அவர்கள் தவிர்க்கிறார்கள். அதேப்போல் வருமானம் அல்லது வசிக்கும் நகரத்தைப் பார்க்கிறார்கள். எனவே, உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றால், நீங்கள் கடன் பெறத் தகுதியற்றவர் என்று அர்த்தமல்ல. அது அந்த நிறுவனத்தின் அளவுகோல்களுடன் பொருந்தாததாக இருக்கலாம்.
ஆகவே நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் கடன் கிடைப்பது உறுதியல்ல. உங்கள் வருமானம், ஸ்திரத்தன்மை மற்றும் திருப்பிச் செலுத்தும் சுமையும் இதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
October 23, 2025 6:31 PM IST


