வாகன இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி காரணமாக, வாகனங்களின் விலைகள் குறைந்தது 1.5 மில்லியன் ரூபாவினால் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது.
இதனால் நுகர்வோரால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டணமானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க வரிகள் மற்றும் அண்மைய வெளிநாட்டு நாணய மாற்று விகித உயர்வுகளுக்கு மேலதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 1.5 மில்லியன் ரூபா
“எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வாகனங்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மேல் விதிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டணத்தை வாகன இறக்குமதியாளர்களால் தாங்க முடியாது.

இதனால் பல வாகனங்களின் விலைகள் 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கும்” என அவர் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்படும் அல்லது விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கான சுங்க வரியும் இந்த கூடுதல் கட்டணம் காரணமாக அதிகரிக்கும் என விளக்கிய அவர், “நிச்சயமாக, வாகனங்களின் விலையில் குறைந்தபட்சம் 1.5 மில்லியன் ரூபா உயர்வு ஏற்படும். ஆனால் இது வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களின் விலை
இருப்பினும், மே 15ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்களை திறந்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், ஆனாலும் அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றின் மதிப்பு உயர்வு காரணமாக அவர்கள் அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கூடுதல் கட்டணம், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் அண்மையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 2.5% ஆக உயர்த்தப்பட்டமை ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, சந்தையில் வாகனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் என இலங்கை வாகன வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

