Last Updated:
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியாவுடன் மோதலை தீவிரப்படுத்தி வருகிறார் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியாவுடன் அமைதியான வழியில் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தானின் போக்கிற்கு ராணுவத் தளபதி அசிம் முனீர் தான் காரணம் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தரப்பினர் குற்றம்சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வெளியே நின்றபடி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் பாகிஸ்தான், பல்வேறு போர்க்கால சூழல்களிலும் கூட அத்துமீறி நுழைந்து தாக்க எத்தனித்ததில்லை. 2016ம் ஆண்டு காஷ்மீரில் உரி பாதுகாப்பு நிலை மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
இதேபோல் 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் தளத்தில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அப்போது கூட இரு நாடுகளும் தங்கள் வான்பரப்பை மூடி தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியதே தவிர எல்லை மீறிச் சென்று தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. ஆனால் தற்போது இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் பாகிஸ்தான் கட்டாயம் தோற்று விடும் என நன்கு தெரிந்த பின்பும் எல்லை தாண்டிய மோதலை அடுத்தடுத்து தீவிரப்படுத்தி வருகிறார் பாகிஸ்தானின் ராணுவத்தளபதி அசிம் முனீர்.
அசிம் முனீரின் இந்த போக்கிற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், ஒரு போரை தாங்கும் நிலையில் இல்லை என்ற போதும், அந்நாட்டை போர் சூழலுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதே அசிம் முனீர் தான் என குற்றம்சாட்டுகிறார். இரு நாடுகளும் மோதிக் கொண்டால் பாகிஸ்தானின் பொருளாதார நிலை மேலும் அதள பாதாளத்திற்கு சென்று விடும். இதனால் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மீது மக்களின் வெறுப்பு அதிகரிக்கும். அவரது அதிகாரம் குறையும், அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதியான தனது அதிகாரிம் அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என அசிம் முனிர் கனவு காண்பதாக இம்ரான் கான் தரப்பு தெரிவித்துள்ளது.
ராணுவத் தளபதி அசிம் முனீரின் அதிகார வெறி தான் இந்த போருக்கு பின்னணியில் உள்ளது என்றும், தேவையின்றி நாட்டை போரை நோக்கி கொண்டு செல்கிறார் என்றும் அப்பட்டமாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நினைத்தால் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போர்ச் சூழலின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் அதை அசிம் முனிர் விரும்பவில்லை என்பதே இந்த குற்றச்சாட்டுக்கு பின் உள்ள அர்த்தமாகும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த போர்ச் சூழலுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதிதான் காரணம் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் தரப்பினரே தெரிவித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
May 09, 2025 10:14 PM IST


