தீபாவளி கட்டுரை – இராகவன் கருப்பையா
‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்… அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…
அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உலா போகும், நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்.’
‘பாண்டவர் பூமி’ திரைக்காக கவிஞர் சிநேகன் இயற்றி, பரத்வாஜ் இசையமைத்துப் பாடிய இந்த பாடல், 10 பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கானமாகும்.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த எங்கள் அனைவருக்கும், மூத்தப் பிள்ளையாகப் பிறந்த பெரிய அண்ணன் ராமச்சந்திரன்தான் தலைவர், ஆலோசகர், வழிகாட்டி, எல்லாமே.
விவரமறிந்த நாள்களிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு பிரதான ஒளியாக இருந்து தீபாவளி கொண்டாட்டங்களுக்கும் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திய எங்கள் அண்ணனின் திடீர் மறைவு, எங்கள் அனைவரது உள்ளங்களிலும் ஈடு செய்ய முடியாத ஒரு வெறுமையை ஏற்படுத்திவிட்டது.
இவ்வாண்டின் தீபத் திருநாள் அவர் இல்லாமல் நாங்கள் கொண்டாடும் முதல் தீபாவளியாகும். அண்ணன் இல்லாத தீபாவளி எப்படி இருக்கும் என சற்றும் ஜீரணிக்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து இங்கு குடிபெயர்ந்த எங்களுடைய பெற்றோர் திக்குத் தெரியாத நிலையில்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
அப்பா தமிழ் கற்றிருந்தார், அம்மா கல்வி கற்கவில்லை. எனினும் தங்களுடைய 8 பிள்ளைகளும் சிறப்பானக் கல்வியைப் பெற வேண்டும் எனும் முனைப்பிலிருந்து துளியளவும் அவர்கள் விலகவில்லை.
ஆங்கிலப் பள்ளியில் தொடக்ககாலக் கல்வியை பயின்ற அண்ணன், அம்மொழியில் பிரமிக்கும் வகையில் புலமைப் பெற்றிருந்தது மட்டுமின்றி தமிழ் மொழியையும் சுயமாகக் கற்றுக் கொண்டார்.
தமிழில் கதை, கட்டுரைகளைப் புனையும் அளவுக்கு அம்மொழியிலும் அவர் வல்லமைப் பெற்று கோலோச்சினார்.
‘சீனியர் கேம்ப்ரிட்ஜ்'(Senior Cambridge) எனும் ஐந்தாம் படிவத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அண்ணன் இந்தியா சென்று மருத்துவம் பயில இலக்குக் கொண்டிருந்தார். ஒரு மருத்துவராக வேண்டும் என்பது அவருடைய நீண்டநாள் கனவாகும்.
ஆனால் குடும்பச் சூழல் காரணமாக, தம்பி தங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தனது வாழ்நாள் கனவுகளை புதைத்துவிட்டு பொருளகம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார்.
அந்த இளம் வயதிலிருந்தே பெற்றோருக்கு உதவியாக குடும்ப பாரத்தைச் சுமக்க ஆரம்பித்த அண்ணன், அவருக்கு அடுத்துப் பிறந்த ஏழு உடன்பிறப்புகளுக்கும் ‘குரு’வாகவும் செயல்பட்டார்.
எங்களுடைய பள்ளி அறிக்கை அட்டைகளில்(Report Card) கூட அவர்தான் கையெழுத்திடுவார். மிகுந்த அறிவுத்திறன் கொண்ட அவர் எங்களுடைய கல்வியைப் பொருத்த வரையில் கடுகளவும் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லாத, கண்டிப்பானவர்.
தமது இளமை காலத்தில் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த அண்ணன் எங்களுக்கும் பயிற்சியளித்து, நாங்களும் அவ்விளையாட்டில் உயர் நிலையை அடைய வகை செய்தார். அதுமட்டுமின்றி சதுரங்க(Chess) விளையாட்டிலும் அவர் சிறந்து விளங்கினார்.
நாளடைவில் எங்களுடைய பெற்றோரின் மறைவுக்குப் பிறகும் கூட குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் அண்ணன் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்கு ஏற்றவாறு நாங்களும் அவருடையச் சொல்லை மீறி எதையும் செய்ததில்லை.
எத்தருணத்திலும் குடும்பத்தை ஒற்றுமையாகக் கட்டிக் காக்க வேண்டும் என்பது பெற்றோர் அவருக்கு இட்டக் கட்டளையாகும். நாங்கள் எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாகும்.
மூன்று சகோதரிகளின் திருமணங்களுக்குப் பிறகும், நாங்கள் 5 சகோதரர்களின் குடும்பங்களும் தீபத்திருநாளை அண்ணன் தலைமையில் ஒன்றாகத்தான் கொண்டாடுவோம். தனித்தனிக் கொண்டாட்டங்கள் எப்போதுமே இருந்ததில்லை.
இவ்வாண்டின் கொண்டாட்டங்கள் வழக்கம் போல சிறு பிள்ளைகளுக்குக் குதூகலமாகத்தான் இருக்கும். ஆனால் பெரியவர்களைப் பொருத்த வரையில் அண்ணன் இல்லாதக் குறை, ஈடு இணையற்ற ஒரு குறையாகவே இருக்கும்.
எங்கள் அனைவரின் நலனுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவர் தனக்கென எதனையும் தேடிக் கொண்டதில்லை.
‘பனி போர்த்திய பூமியிலே,’ எனும் என்னுடைய பயண நூல் வெளியீட்டின் போது அவருக்கு முதல் மரியாதை செலுத்தியதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறிய அண்ணன், உற்சாகத்தோடு கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சி அந்த நூல் வெளியீட்டு விழாதான்.