Last Updated:
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் இருந்தபோதிலும், ஷதாப் கானால் பெரிய அளவில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டில் பெரும் பரபரப்பையும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் மீது முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் தற்போது விளையாட்டு உலகில் பேசுபொருளாகியுள்ளன.
அணியின் தற்போதைய கேப்டன் சல்மான் ஆகா பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும், அவருக்குப் பதிலாக ஷதாப் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஷாகித் அப்ரிடி, ஷதாப் கானின் கேப்டன்சி குறித்த கேள்விக்கு மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்.
அப்ரிடி பேசும் போது “ஷதாப் கானின் தற்போதைய ஆட்டத் திறனை வைத்துப் பார்க்கும்போது, அவருக்குக் கேப்டன் பதவியைக் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், பாகிஸ்தான் அணியின் ஆடும் 11 வீரர்கள் அணியில் இடம் பெறுவதற்கே அவர் தகுதியற்றவர்” என்று கடுமையாக சாடினார். தலைமை பயிற்சியாளர் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருவதால்தான் அவர் இன்னும் அணியில் நீடிக்கிறார் என்றும், அப்ரிடி குற்றம் சாட்டினார். அவரது கருத்துகள் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அவர் விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்; பேட்டிங்கிலும் 118 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
Mar 03, 2026 12:05 PM IST


