Last Updated:
Flower Prices| அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தை போன்று பூ விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி.
அட்சய திருதியை பூஜை செய்வதற்கான உகந்த நாள் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த மங்களகரமான வேலையும் செழிப்பையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு அட்சய திருதியை 30 ஏப்ரல், 2025 அன்று வருகிறது. இது ஏப்ரல் 29, 2025 அன்று மாலை 05:31 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 30, 2025 அன்று மதியம் 02:12 மணிக்கு முடிவடைகிறது. அட்சய திருதியை நாளன்று, பூஜையறையில் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வங்களை மனதார வணங்க வேண்டும். அன்றைய நாளில் புதிதாக தொழில் தொடங்கலாம். வீடு குடிபுகலாம் உள்ளிட்ட பல நல்ல காரியங்களை செய்யலாம். இந்த நாளன்று தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிப்பதோடு, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்ற நிவேதனங்களையும் அர்ப்பணிக்க வேண்டும்.
மேலும் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை போன்ற வாசனை மலர்களை பயன்படுத்தி, வீட்டிலும் வியாபார இடங்களிலும் பக்திபூர்வமாக பூஜை செய்தால், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப நலனும் பெருகும். இந்நிலையில் அட்சய திருதியை நாளில் பூக்களும் முக்கியத்துவம் என்பதால் அதன் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. குறிப்பாக கோவையில் அனைத்து வாசனை பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரி கூறுகையில், “அட்சய திருதியை முன்னிட்டு மல்லி பூவின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைவு, அட்சய திருதியை போன்ற காரணத்தினால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மல்லி 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அரளி 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை, சம்பங்கி 160 ரூபாய் முதல் 200 ரூபாய். செவ்வந்தி 140 முதல் 200 ரூபாய் வரை, பட்டு பூ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, செண்டு மல்லி 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக தெரிவித்தார்”.
April 30, 2025 10:39 AM IST

