ஐசிசி தொடர்களில் 2011-ல் ருந்தே தொடர்ந்து நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்று இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடி வரும் நிலையில், அடுத்த 8 ஆண்டுகளுக்கு உலகை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகவே உள்ளது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றதையடுத்து அடுத்தத் தலைமுறை வீரர்கள் அட்டகாசமாக அணியைக் கொண்டு செல்வார்கள் என்று விராட் கோலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி கூறும்போது, “அணியை விட்டுச் செல்லும்போது, அணி நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்வது அவசியம். அடுத்த 8 ஆண்டுகளுக்கு உலகை எதிர்கொள்ளும் அணி நம்மிடையே உள்ளது. ஷுப்மன் கில் தனித்துவமாகத் திகழ்கிறார். ஸ்ரேயஸ் அய்யர் அருமை, கே.எல்.ராகுல் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுக்கிறார். ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சிறப்பாகத் திகழ்கிறார்.
கடினமான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு நாங்கள் மீண்டு எழ கடும் முயற்சிகளை மேற்கொண்டோம். பெரிய தொடரை வெல்ல வேண்டும் என்று இருந்தோம். இப்போது அதைச் செய்து முடித்து விட்டோம். ஆகவே இது அற்புதமான உணர்வு. ஓய்வறையில் திறமைக்குப் பஞ்சமில்லை. அவர்கள் ஆட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல விரும்புகின்றனர். மூத்த வீரர்களான நாங்கள் அதற்கு உதவுகிறோம். இதுதான் இந்திய அணியையே வலுவாக்கியுள்ளது.
சாம்பியனாக ஆட வேண்டும், நம்மை நாமே சவாலுக்குட்படுத்திக் கொண்டு பிரஷரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அணியில் அனைவருமே இதற்குத் தயாராக உள்ளனர். அனைவரும் தாக்கம் ஏற்படுத்தும் ஆட்டத்தை ஆடுகின்றனர். ஓர் அற்புதமான அணியின் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். பயிற்சியில் கடினமாக ஆடுகிறோம், அது சிறப்பானதொரு உணர்வை ஏற்படுத்துகிறது. நியூஸிலாந்து அணி ஒவ்வொரு முறை எங்களுக்கு எதிராக வரும் போதும் திட்டமிடலுடன் வருகின்றனர். அவர்களை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது.
உலகின் தலைசிறந்த ஃபீல்டிங் அணி என்றால் அது நியூஸிலாந்துதான். தொடர்ந்து உலகின் சிறந்த அணிகளுள் ஒன்று என்பதை நிரூபிக்கின்றனர். என்னுடைய மிகச் சிறந்த நண்பர் கேன் வில்லியம்சன் தோல்வியில் முடிந்தது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நானும் தோல்விப் பக்கம் இரு முறை இருந்துள்ளேன். அதாவது, அவர் அப்போது வெற்றியின் பக்கம் இருந்தார். ஆகவே, எங்களுக்கு இடையே நட்புதான் பெரிது” என்றார் விராட் கோலி.