Last Updated:
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நெடுஞ்சாலைத் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயரும் என்று அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய நெடுஞ்சாலைகளின் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க தரத்திற்கு இணையாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நெடுஞ்சாலைத் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயரும் என்று அறிவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜார்க்கண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நெடுஞ்சாலைத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும், நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் அடித்தளம் என்றும் குறிப்பிட்டார்.
அவரது உரையில், “உலகத் தரத்திற்கு இணையான பொறியியல், நீடித்த பயன்பாடு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நவீன சாலைகள் மட்டுமின்றி, டிசம்பர் 2025-க்குள் இந்தியாவின் தளவாடச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14%லிருந்து 9%ஆக குறைக்கப்படும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்” என்றார்.
ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், “மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நான் முழுமையாக உறுதி பூண்டுள்ளேன். ஏற்கனவே ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கூடுதலாக, ரூ.75,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கின்றன” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நனவாக்கும் நோக்கில், பல முக்கிய பசுமை மற்றும் பொருளாதார வழித்தட திட்டங்களை கட்கரி அறிவித்தார்.
- வாரணாசி-ராஞ்சி-கொல்கத்தா பசுமை வழித்தடம் – ரூ.36,000 கோடி மதிப்பில், மார்ச் 2028-க்குள் முடிவடையும்.
- ராஞ்சி-வாரணாசி பொருளாதார வழித்தடம் – ரூ.12,800 கோடி மதிப்பில், ஜனவரி 2028-க்குள் முடிவடையும்.
- டெல்லி-கொல்கத்தா ஆறு வழித்தடம் – ரூ.31,700 கோடி மதிப்பில், ஜூன் 2026-க்குள் முடிவடையும்.
- ராஞ்சி-பாட்னா நான்கு வழி வழித்தடம் – ரூ.8,900 கோடி மதிப்பில், டிசம்பர் 2029-க்குள் முடிவடையும்.
- ராய்ப்பூர்-தன்பாத் வழித்தடம் – ரூ.16,500 கோடி மதிப்பில், ஜனவரி 2028-க்குள் முடிவடையும்.
ராஞ்சி ரிங் ரோடு திட்டத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாபா பைத்யநாத் கோயில் உள்ளிட்ட முக்கிய மத மற்றும் சுற்றுலா தலங்களை நெடுஞ்சாலை வழியாக சிறப்பாக இணைக்கும் வகையில் பல புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
July 06, 2025 6:56 PM IST
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க தரத்துக்கு நிகராக இருக்கும்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி…!