Last Updated:
குரூப் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியா நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதும் போட்டிகளின் விபரங்கள் வெளிவந்துள்ளன.
கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், குரூப் ‘ஏ’ பிரிவில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிராகவும் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பல்லேகலேயில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் சந்திக்கப்போகும் எதிரணிகள் மற்றும் போட்டி அட்டவணைகள் தற்போது உறுதியாகியுள்ளன.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுடன் ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் பிப்ரவரி 22-ஆம் தேதி அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னையில் ஜிம்பாப்வே அணியுடன் மோதவுள்ளது. இறுதியாக, மார்ச் 1 ஆம் தேதி கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது சூப்பர் 8 சுற்றை இந்தியா நிறைவு செய்கிறது.

