Last Updated:
அஜித் பவார் விமான விபத்தில் சதி இருக்கலாம் என ரோஹித் பவார் குற்றம் சாட்டினார்; CID விசாரணைக்கு எதிர்ப்பு, சர்வதேச விசாரணை கோரிக்கை.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்தில் சதித்திட்டம் இருக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அவரது உறவினருமான ரோகித் பவார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். இந்த விமான விபத்து தொடர்பாக வரைபடங்களுடன் விளக்கம் அளித்துள்ள ரோஹித் பவார், விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் விமானியின் பின்னணி குறித்துப் பல சந்தேகங்களை எழுப்பினார்.
விபத்து நடந்த அன்று காலை கடைசி நிமிடத்தில் விமானி மாற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பணியில் இருந்த விமானி சுமித் கபூர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்பதற்கான வாட்ஸ்-அப் ஆதாரங்களை வெளியிட்டார். தரையிறங்கும் போது ஏ.டி.சி (ATC) அறிவுறுத்திய ஓடுதளத்தைப் பயன்படுத்தாமல், விமானி பிடிவாதமாக வேறொரு ஓடுதளத்தைக் கோரியது ஏன்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
கடைசி நிமிடங்களில் விமானி மௌனமாக இருந்தது மற்றும் ராடார் தகவல்கள் துண்டிக்கப்பட்டது போன்றவை திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் சி.ஐ.டி (CID) விசாரணையில் தமக்கு உடன்பாடில்லை என்றும், சர்வதேச முகமைகள் மூலம் இந்த விபத்தை விசாரிக்க வேண்டும் என்றும் ரோஹித் பவார் வலியுறுத்தினார்.


