Last Updated:
அசாமில் அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. 126 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டதுபோல், ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகித்தது.
மொத்தம் 85.96 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், பாஜக 82 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சிகள் தலா 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சுமார் 50 ஆண்டுகள் அசாமை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் வீழ்ந்தது.
அசாம் தேர்தல்
ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தனர். இது, அங்குள்ள இந்துக்களிடையே மத ரீதியான சிந்தனையை வலுப்படுத்தி, அவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்ததாக கூறப்படுகிறது. 100க்கும் அதிகமான இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைவசப்படுத்திய நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடினார்.
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவையும், தாங்கள் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாகவும் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
#WATCH | Guwahati | Assam CM Himanta Biswa Sarma says,” I thank both the PM and Union Home Minister, by winning West Bengal, we have made the whole of North East more safe.” pic.twitter.com/3fX3xlanWQ
— ANI (@ANI) May 4, 2026
கடந்த முறையைவிட அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


