Last Updated:
அசாமில் கனமழை, வெள்ளத்தால் பல கிராமங்கள் பாதிப்பு. மங்கள்தோய், கலியாபோர், சிவசாகர், உடல்குரி பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. 732 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
அசாமின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அசாம் மாநிலம் மங்கள்தோய் என்ற இடத்தில் நோயானை ஆற்றின் கரை உடைந்ததால் ஔதலா, பெங்காபரா, மதங்கா உள்ளிட்ட பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஔதலா மேல்நிலைப் பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலியாபோர் பகுதியில் திஜு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காலபானி, திஜு வேலி உள்ளிட்ட தேயிலை தோட்டப் பகுதிகள் இரு வாரங்களில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 732 பேர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சிவசாகரில் தரிகா ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் விவசாய பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. உடல்குரி மாவட்டம் மஜ்பாத்தில் பொங்கி வழியும் பூதியாமாரி, பாகா ஆறுகளின் சீற்றத்தால் மஜ்பாத்-காதாபில் இணைப்புச் சாலை மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் காட்புரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளன.


