Last Updated:
அசாமில் அவசர கால தரையிறக்க சாலையில் பிரதமர் மோடி பயணித்த சி130 விமானத்தை தரையிறக்கி சாதனை படைக்கப்பட்டது.
அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச்சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் வசதியுடன் சாலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், அவர் பயணித்த சி130 ரக விமானம் அதில் தரையிறக்கியது வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இந்திய விமானப்படை நிகழ்த்திய 40 நிமிட வான் சாகசங்களை பிரதமர் மோடி கண்டு களித்தார். நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தரையிறக்க சாலை, இக்கட்டான சூழலின்போது, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு மாற்று ஓடுபாதையாகவும், ராணுவ வீரர்கள், மீட்புப் படையினர் விரைவாக செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓடுதளம் சீன எல்லைக்கு மிக அருகில், அதாவது சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போர் காலங்களில் வடகிழக்கு இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் விரைவாக எல்லைக்குக் கொண்டு செல்வதிலும் NH-37 முக்கியப் பங்கு வகிக்கும்.
வெறும் சாலையாக மட்டுமல்லாமல், தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. விமானங்களை நிறுத்துவதற்கும், திருப்புவதற்கும் ஏதுவாக சாலையின் இரு முனைகளிலும் ‘பார்க்கிங் ஸ்லாட்டுகள்’ அமைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தற்காலிக ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் வசதிகளையும் இங்கு ஏற்படுத்த முடியும்.
யுத்த காலங்கள் மட்டுமின்றி, அசாம் போன்ற மாநிலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களின் போது, வழக்கமான விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டால், இந்தஅவசர தரையிறக்க வசதி மூலம் நிவாரணப் பொருட்களையும் மீட்புக் குழுவினரையும் விரைவாகக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடதக்கது.

