புதுடெல்லி: இந்தியாவில் இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணப் பரிவர்த்தனையில் யுபிஐ 85% பங்கு வகிக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகை காரணமாக நடப்பு அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 74 கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல, அதிகபட்சமாக தினசரி யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதுவரை 6 முறை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. அதேநேரம் சராசரி தினசரி யுபிஐ பணப் பரிவர்த்தனையின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ.94 ஆயிரம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தைவிட 13% அதிகம். யுபிஐ பரிவர்த்தனையை நிர்வகிக்கும் இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழக (என்பிசிஐ) புள்ளிவிவரத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தின் முடிவில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.28 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒரு மாத அதிகபட்ச யுபிஐ பரிவர்த்தனை ரூ.25 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.