
கண்டி – மாத்தளை ஏ-9 வீதியில் அக்குறணை பகுதியில் நால்வர் உயிரிழக்கக் காரணமான தொடர் வாகன விபத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதியை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி – மாத்தளை ஏ-9 பிரதான வீதியில் அக்குறணை, குருகொட சந்தியில் இன்று (19) இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டியை நோக்கி சீமெந்து தூளை ஏற்றிச் சென்ற பாரிய பவுசர் லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த ஏனைய வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அக்குறணை 7ஆம் கட்டை குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் ஓட்டோக்கள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகின.
விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

