குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த பயணத்தின் போது ஒரே ஒரு பயணி மட்டும் உயிருடன் தப்பியுள்ளார். இருக்கை எண் 11 ஏ வில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார் என்ற நபர் உயிர் தப்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் அவர் கோர விபத்திலிருந்து அதிக காயங்கள் இல்லாமல் சாதாரணமாக நடந்து சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அவர் பயணித்த 11 ஏ என்ற சீட் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் விமான பயணத்தின் போது பாதுகாப்பான இருக்கை என்று ஏதேனும் உள்ளதா? அப்படியென்றால் அது எந்த இருக்கை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
பல்வேறு ஆய்வுகளின் படி 2015 ஆம் ஆண்டு டைம் இதழ் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது. அதாவது விமானத்தின் கடைசியில் இருந்து மூன்றாவது வரிசையில் இருக்கும் இருக்கைகள் மிக குறைந்த இறப்பு விகிதங்களை கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஏனென்றால் விபத்தின் போது விமானத்துடைய முன் பக்கம் தான் கடுமையாக பாதிப்பு அடையும். முன் பக்கத்தை விட பின்புறத்தில் இருக்கும் பயணிகள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம் உள்ளன. இதே போன்று நடு இருக்கைகளில் இறப்பு விகிதம் 28% வரை குறைவாக இருக்கிறது.
விபத்து ஏற்படும்போது எந்த பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் நடுப்புறத்தில் ஓரளவு மிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. விமானத்தின் முன் பக்கம் தான் அதிக ஆபத்தைக் கொண்டதாக, அதிக இறப்பு விகிதங்களை கொண்டதாக உள்ளது.
விபத்து ஏற்படக்கூடிய சூழலில் நாம் விமானத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது அவசியமாகும். வெளியேறும் இடத்திற்கு அருகில் குறிப்பாக பின்புறத்தில் அமர்ந்திருப்பது உயிர் வாழக்கூடிய வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்யும்.
குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால் இவை புள்ளி விபரங்களின் அடிப்படையில் தரப்பட்டவைதான் ஒவ்வொரு சூழலும் நிலைமையும் மாறும் என்பதால் அந்த சூழலுக்கு ஏற்ற வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
June 12, 2025 10:30 PM IST

