Last Updated:
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அறிக்கையை விமானிகள் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அறிக்கை விமானிகளை குற்றம்சாட்டும் வகையில், பாரபட்சமாக உள்ளதாக கூறி அதனை ஏற்க முடியாது என இந்திய விமானிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
260 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்தது. இதில் விமானிகள் அறையில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் கட்ஆஃப் நிலைக்கு நகர்ந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆஃப் ஆனது குறித்து விமானிகளின் உரையாடல் மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மை இன்றி மறைமுகமாக நடந்துவருவதாகவும், இதனால் விசாரணையின் மீது நம்பிக்கை உருவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுபவம் வாய்ந்த விமானிகளிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் செல்லும் வால்வு ஆஃப் – ஆனது இயந்திர கோளாறாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் தொனியே பாரபட்சமாக இருப்பதாகவும், விமானிகளின் தவறு தான் விபத்துக்கு காரணம் என்பதுபோல அறிக்கை உள்ளதாகவும் தெரிவித்து, இந்த அனுமானங்களை நிராகரிப்பதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கள் சங்கத்தை பார்வையாளராக வைத்து விபத்து குறித்து நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Ahmedabad,Gujarat
July 12, 2025 8:01 PM IST


