Last Updated:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிகழ்வு இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 93 ரன்கள் குவித்து வெறும் 7 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இந்த வெற்றியின் மூலமாக இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்றைய ஆட்டத்தின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த காயம் காரணமாக அவர் உள்நாட்டு போட்டிகளில் அவதிப்பட்டு வந்த நிலையில், காயம் அதிகரித்ததன் காரணமாக அவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் ஆயுஷ் படோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறாதது பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் வாஷிங்டன் சுந்தர் இருந்து வந்தார். அவரது பந்துவீச்சு பவர் பிளே ஓவர்களில் எதிரணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில் அவர் அணியில் இடம் பெறாதது பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.


