நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம்முதல் நீரோடி வரையிலான 46 மீனவ கிராமங்களில் கரைமடி பகுதியில் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதத்தில் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லவில்லை. மீன் வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடின.
தற்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று கரை திரும்பிய விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீன் வரத்து குறைவாக இருந்தது.
மீனவர்கள் பிடித்து வந்த வெளை மீன், நவரை மீன், இறால், நண்டு, சுறா, நெய்மீன், பாரை,திருக்கை மீன்கள் விற்பனைக்காக துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்கவியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர்.
தேவைக்கு குறைவாகவே இருந்ததால் மீன் விலை கடுமையாக உயர்ந்தது. சாதாரணமாக கிலோ 120 ரூபாய் வரை விலைபோகும் நவரை 200 ரூபாய்க்கும், கிலோ ரூ.100 வரை விலைபோகும் சூரை மீன், நண்டு, இறால்போன்றவை 180 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்தது. இதேபோல் பெரிய அளவிலான சுறா மற்றும் திருக்கை மீன் ஒன்று ரூ.10,000 வரை விலைபோனது உள்ளூர் தேவைக்கே தட்டுப்பாடு நிலவும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.