கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவோரை கவலை அடைய செய்துள்ளது. கோவையில் நேற்று மாலை ஒரு பவுன் ஆபரண தங்கம் 48,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட் ராம் கூறியதாவது: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை நகரில் தினசரி வர்த்தகம் 50 சதவீதமாக குறைந்துள்ளது. பெரும்பாலும் மக்கள் செயின், மோதிரம் உள்ளிட்ட சிறிய நகைகளை மட்டுமே வாங்க அதிக ஆர்வம் காட்டு கின்றனர். அதிக விலை காரணமாக மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளதால் எதிர் வரும் நாட்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வரி விதிக்கிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைத்தால் தற்போதைய சூழலில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.5,500 வரை குறையும்.
மக்கள் நலன் கருதி மத்திய அரசு இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்து சங்கம் சார்பில் மனு அளித்துள்ளோம், என்றார்.