ராகுலின் நடைப்பயணம் மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் கூறியதாவது, தெலங்கானா மற்றும் கர்நாடகம் தேர்தல்களில் ஏற்பட்டதைப் போன்று ராகுலின் நடைப்பயணம் மக்களவைத் தேர்தலிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மணிப்பூர் முதல் மும்பை நடைப்பயணத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களைப் பெறுவோம் என்று கணிப்பது கடினம். நாங்கள் நிறைய இடங்கள் பெறுவோம் என்று நினைக்கிறேன். இது இந்திய ஒற்றுமை நிதி நடைப்பயண மாரத்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ராகுல் காந்தியின் செய்தி எளிமையானது.
காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்பதுதான் அது. நாங்கள் வெறுப்பை பரப்புவதில்லை, ஆனால் மகிழ்ச்சியையும் அமைதியையும் பரப்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுலின் இந்திய ஒற்றுமை நிதி நடைப்பயணம் ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மாா்ச் 17-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிறைவடையவுள்ளது.
இதையொட்டி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவுள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் குஜராத்தில் உள்ள மேன்ட்வியில் இன்று நுழைந்தது. அங்கு குழந்தைகளை சந்தித்து அவர் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.