அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தில், குழந்தை வளர்ப்பு குறித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டு வந்த 42 வயது ரூபி ஃபிராங்க் (Ruby Franke) என்ற பெண்மணி, தன் சொந்த பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய வழக்கில், நீதிமன்றம் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2015-ல் `8 Passengers’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ரூபி ஃபிராங்க் தொடங்கியிருந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள் இருக்கின்றன. இவர், குழந்தை வளர்ப்பு பற்றி தனது யூடியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களைப் பதிவிட்டதன் மூலம் மெல்ல மெல்ல பிரபலமடைந்தார்.

குறுகிய காலத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான subscribers-ஐ பெற்றார். அதேசமயம், இவரின் சேனல் பிரபலமடைந்து வரும்போதே 2022-ல் அந்தச் சேனல் நீக்கப்பட்டது. அதே ஆண்டில், தன் கணவரையும் பிரிந்தார். இப்படியிருக்க, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூபி ஃபிராங்கின் 12 வயது மகன், தனது வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து வீட்டாரிடம் உணவு, தண்ணீர் போன்றவற்றைக் கேட்டபோது, இவரின் செயல்கள் வெளிவரத் தொடங்கியது.
அப்போது, அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் 911 நம்பருக்கு போன் செய்து, சிறுவன் மிகவும் மெலிந்திருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, ரூபி ஃபிராங்க் மற்றும் அவரின் பிஸ்னஸ் பார்ட்னர் ஜோடி ஹில்டெப்ராண்ட் (Jodi Hildebrandt) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், ரூபி ஃபிராங்க் தன்னுடைய மகன் மற்றும் மகளை, கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உட்டாவில் உள்ள வாஷிங்டன் கவுண்டியில் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.

கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தல், வெயிலில் காலணிகள் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்தல், ஆரோக்கியமற்ற உணவை அளித்தல், புத்தகம், மின்னஞ்சல் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுத்தல், தனிமைப்படுத்துதல், காலணி அணிந்தபடி காலால் உதைத்தல், தப்பிக்க முயன்றபோது கை, கால்களை கயிற்றால் இறுக்கிக் கட்டுதல், அதனால் ஏற்பட்ட காயங்களை டேப்பால் மறைத்தல், சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நீருக்குள் தலையை அழுத்துதல் என ரூபி ஃபிராங்க் தன் மகனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
மேலும், ரூபி ஃபிராங்கின் ஒன்பது வயது மகளும், இதேபோன்ற கொடுமைகளுக்கு ஆளான நிலையில், ஜோடி ஹில்டெப்ராண்ட் வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். குறிப்பாக, உணவு, தண்ணீர் தர மறுத்தல், வெறுங்காலுடன் வெளியில் வேலை செய்ய வைத்தல், அசுத்தமான சாலைகளில் நீண்ட நேரம் வெறுங்காலுடன் ஓட வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ரூபி ஃபிராங்கின் மகள் ஆளானார். இதனால், அவரின் மகள் உடல் மெலிந்து, உடலில் கொப்புளங்கள், சிரங்கு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், ரூபி ஃபிராங்க் மீதான வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்தது. ரூபி ஃபிராங்க் தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, இருவருக்கும் நீதிபதி 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த சிறைத் தண்டனை ஒரு தவணைக்கு 15 ஆண்டுகள் என நான்கு தவணை இருக்கும் என்றும், இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்ல 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பேசிய ரூபி ஃபிராங்க், “இருளை ஒளி என்றும், சரியானதைத் தவறு என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த உலகமே ஒரு தீய இடம். இது முழுக்க, கட்டுப்பாடுகளை விதிக்கும் போலீஸ், காயம் ஏற்படுத்தும் மருத்துவமனைகள், மூளைச் சலவை செய்யும் அரசு இயந்திரம், பொய் மற்றும் காம எண்ணம் கொண்ட தேவாலய தலைவர்கள், பாதுகாக்க மறுக்கும் கணவர்கள், துன்புறுத்தல்களை அனுபவிக்கத் தகுந்த குழந்தைகள் நிறைந்தவை என்று நம்பிக்கொண்டிருந்தேன்.

உங்களுக்காக (குழந்தைகள்) எதையும் செய்வேன் என்று உங்களுக்கான பாதுகாப்பானவை, நல்லவை அனைத்தையும் பறித்துவிட்டேன். உங்களின் மென்மையான ஆன்மாக்களைப் புண்படுத்தியதற்காக இனி அழுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். இப்போது சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் குணமடைந்து அழகான வாழ்வை வாழ்வீர்கள் என்று நம்புகிறேன். அதுவே என் பிரார்த்தனையும் கூட” என்று கண்ணீர்விட்டு அழுதார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY