அடுத்த மாதம் துவங்க இருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சௌதி அரேபியாவில் உயிர்க்கொல்லி ‘மெர்ஸ்’ பரவும் சம்பவங்களை தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாக சௌதி அரேபியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஹஜ் யாத்திரைதான் முஸ்லீம்கள் உலகளாவிய அளவில் மிகப்பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடும் வருடாந்திர நிகழ்வாகும்.
காய்ச்சலையும், இருமலையும் உருவாக்கும் இந்த மெர்ஸ் வைரஸ் அது தோன்றியதாக முதலில் தகவல் வந்த இரண்டாண்டுகளில் 300க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது.
இந்த வைரஸ் தொற்றை சமாளிக்க அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் இன்னுமொரு முறை இந்தத் தொற்று பீடிக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால், யாத்ரீகர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர்.
ஆனால் உலக சுகாதார நிறுவனமோ, இந்த நிலைமை பொதுச் சுகாதாரக் கவலைகளை இன்னும் தோற்றுவிப்பதாகவும், யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுமாறும் கூறியிருக்கிறது.