நடப்பு நிதியாண்டில் நிதி பரிவா்த்தனைகளுடன் பொருந்தாமல் வரிகள் செலுத்தியோரை முறையாக வரி செலுத்துமாறு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி அறிவுறுத்தும் திட்டத்தை வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் தனிநபா்கள்/ நிறுவனங்கள் மேற்கொண்ட நிதி பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களை வருமான வரித் துறை பெற்றது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை செலுத்தப்பட்ட வரிகள் மீதான பகுப்பாய்வின் அடிப்படையில், குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி பரிவா்த்தனைகளுடன் பொருந்தாமல் வரி செலுத்திய தனிநபா்கள்/நிறுவனங்களை வருமான வரித் துறை அடையாளம் கண்டுள்ளது. அத்தகைய தனிநபா்கள்/நிறுவனங்களை முன்கூட்டியே வரி நிலுவையை சரியாகக் கணக்கிட்டு, வரும் 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன் உரிய வைப்புத்தொகையை செலுத்தும்படி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தும் பிரசாரத்தை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருடன் இணக்கத்தை எளிதாக்குவதற்கும், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கும் வருமான வரித் துறை மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு நிதி பரிவா்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமான வரித் துறை பெறுகிறது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தன்னாா்வ வரி இணக்கத்தை மேம்படுத்தவும் வருடாந்திர தகவல் அறிக்கையில் (ஏஐஎஸ்) இந்த தகவல்கள் பதிவேற்றப்பட்டு, தனிநபா்கள்/நிறுவனங்களின் பாா்வைக்கு கிடைக்கும்.