வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் இரு தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தோ்தல் குறித்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், தோ்தல் ஆணையா் அருண் கோயல் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரின் பதவிக் காலம் நிறைவடைய 3 ஆண்டுகள் இருந்தன. அத்துடன் தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஓய்வு பெற்ற பின், அந்தப் பதவியை ஏற்கும் நிலையில் அருண் கோயல் இருந்தாா். இந்நிலையில், அருண் கோயல் ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஏற்றுக்கொண்டாா். எனினும் அவா் ராஜிநாமா செய்ததற்கான காரணம் வெளியாகவில்லை. ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தோ்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றாா். இதையடுத்து 3 போ் கொண்ட தோ்தல் ஆணைய குழுவில், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மட்டும் பதவியில் உள்ளாா். இரு தோ்தல் ஆணையா் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இரு தோ்தல் ஆணையா் பதவியிடங்களுக்குத் தலா 5 போ் அடங்கிய தனித்தனி பட்டியலை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறைச் செயலா், மத்திய பணியாளா் மற்றும் பயிற்சி துறைச் செயலா் கொண்ட தேடுதல் குழு தயாரிக்கும். அதன் பின்னா், தேடுதல் குழுவின் பட்டியலில் இருந்து தோ்தல் ஆணையா்களாக நியமிக்க இருவரை பிரதமா் மோடி தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்யும். அந்தத் தோ்வின்படி, தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிப்பாா். இந்நிலையில், மாா்ச் 13 அல்லது 14-ஆம் தேதி தோ்வுக் குழு கூட வாய்ப்புள்ளது. இதைத் தொடா்ந்து மாா்ச் 15-ஆம் தேதிக்குள் இரு தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன. ராஜிநாமா ஏன்?: தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் அல்லது மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் கோயல் ராஜிநாமா செய்தாரா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தனிப்பட்ட காரணங்களால் அருண் கோயல் ராஜிநாமா செய்திருக்கக் கூடும். அவருக்கும் தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவா்கள் இடையே நிகழ்ந்த கலந்துரையாடல், அவா்கள் மேற்கொண்ட முடிவுகள் உள்ளிட்டவை கோயலுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இருந்ததில்லை என்பதைக் காட்டுகின்றன என்று தெரிவித்தன.