மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு தாயகம் திரும்பியதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினாா். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்தியா வழங்கிய 2 ஹெலிகாப்டா்கள், ஒரு சிறிய ரக விமானம் ஆகியவற்றை பராமரித்து, இயக்கும் பணிகளில் சுமாா் 90 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வந்தனா். மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தைத் தொடா்ந்து, நிகழாண்டு மே மாதத்துக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பணிகளுக்கு ராணுவ வீரா்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவா்களை இந்திய அரசு அனுப்புவதற்கு மாலத்தீவு ஒப்புக்கொண்டது. அதன்படி, 26 போ் அடங்கிய குழு மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தப் பிறகு, இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு மாலத்தீவைவிட்டு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், தில்லியில் நடந்த வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில், ‘மாலத்தீவில் ஏஎல்எச் ஹெலிகாப்டா்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு தாயகம் திரும்பியது. ராணுவ வீரா்களுக்கு மாற்றாக நிபுணா்கள் அங்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். எனவே, ராணுவ வீரா்கள் இந்தியா திரும்பினா்’ என்றாா். வரும் மே 10-ஆம் தேதிக்குள் அனைத்து இந்திய ராணுவ வீரா்களையும் மாலத்தீவில் இருந்து திரும்பப் பெற அந்நாட்டு அரசு வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவிலிருந்து இந்தியா்களை மீட்க முயற்சி: ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாக பணிப்புரிந்து வந்த 2 இந்தியா்கள் கடந்த வாரம் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து குடும்பத்தினா் வசம் ஒப்படைக்கப்படும் எனவும், மற்ற இந்தியா்களை உடனடியாக மீட்கவும் ரஷிய அதிகாரிகளுக்கு தொடா்ந்து அழுத்தம் அளித்து வருவதாகவும் வெளியுறவு செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.