இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 1,99,364-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி உள்ளிட்ட நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,99,364-ஆக உள்ளது. இது நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும். முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,72,535-ஆக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 1,70,214-ஆக உள்ளது. 2023 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 1,51,367-ஆக இருந்தது. இது தவிர, கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 23,921-ஆக உள்ளது.
2023 ஜனவரியில் 1,47,348-ஆக இருந்த நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை கடந்த ஜனவரியில் 13.20 சதவீதம் அதிகரித்து 1,66,802-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.