கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் காயம்பட்ட விவகாரத்தில் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
மம்தா பானர்ஜி நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை அன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவருக்கு சிகிச்சை அளித்த மணிமோய் பந்தோபாத்யாய், “ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.
நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னால் இருந்து தள்ளியதால் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கலாம்” என்று பேசினார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கஜாரி பானர்ஜி என்பவர் நிருபர்களிடம் பேசும்போது, “என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் யாரோ பின்னால் இருந்து தள்ளப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்” என்று கூறினார். இதனால் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டிருக்கலாம் என்பது போல் செய்திகள் வெளியாகின.
2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் போது, மம்தாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அவரை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது ஒரு பிரச்சினை அல்ல. எங்கள் அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். பின்னாலிருந்து தள்ளப்பட்டது போல உணர்வு இருந்ததால் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்றே சொன்னோம். ஒரு நபர் நிலைதடுமாறி கீழே விழும்போது இவ்வாறு நிகழ்கிறது” என்று விளக்கம் அளித்தார்.