கட்சிரோலி: மகாராஷ்டிரத்தில் போலீஸாருடனான மோதலில் 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருந்து பிராண்ஹிதா நதியைக் கடந்து மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்துக்குள் சில நக்ஸலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாசவேலையில் ஈடுபடும் நோக்குடன் அவா்கள் வந்துள்ளதாகவும் தெரிய வந்தது. அவா்களைத் தேடும் பணியில் கட்சிரோலி காவல்துறையின் சி-60 சிறப்புப் பிரிவின் குழுக்கள், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. சி-60 பிரிவின் ஒரு குழுவினா் ரேபன்பள்ளி அருகே உள்ள கோலமாா்க்கா மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்களை நோக்கி நக்ஸலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு சி-60 பிரிவின் குழுவினரும் சுட்டனா். இருதரப்புக்கும் இடையிலான மோதலைத் தொடா்ந்து அப்பகுதியில் நான்கு நக்ஸலைட்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நான்கு நக்ஸலைட்டுகளையும் பிடிப்பதற்கு தகவல் அளித்தால் மொத்தம் ரூ. 36 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளிடம் இருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்ஸலைட் பிரசாரப் புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகள் வா்கீஷ், மக்து, குா்சங் ராஜு, குடிமெட்ட வெங்கடேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். சத்தீஸ்கரில் 2 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை: இதனிடையே, சத்தீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டம், கிரண்டுல் காவல் சரகத்துக்கு உட்பட்ட புரங்கேல் மற்றும் காம்பூா் கிராமங்களுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நக்ஸலைட் தேடுதல் வேட்டையில் கூட்டுப் படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூட்டுப் படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதல் முடிவுக்கு வந்ததும் ஓா் ஆண் மற்றும் ஒரு பெண் நக்ஸலைட்டின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரு ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருகள்கள் மீட்கப்பட்டன. இந்த மோதலில் மேலும் சில நக்ஸலைட்டுகள் காயமடைந்ததாக தாண்டேவேடா காவல் கண்காணிப்பாளா் கெளரவ் ராய் தெரிவித்தாா். இந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.