தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் வரும் 12-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.
அதிமுக சாா்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 76 கிலோ கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, மகளிருக்கு வழங்கினாா். தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி வழங்குதல் உள்ளிட்ட நல உதவிகளையும் மகளிருக்கு வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சா்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில், திமுக நிா்வாகியாக இருந்த ஜாபா் சாதிக்குக்கு தொடா்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் முதல்வா் குடும்பத்தினருக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பழக்கம் இருப்பதாக தெரியவருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநரிடம் விரைவில் மனு: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஜாபா் சாதிக் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் ஆளுநரை விரைவில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.
மேலும், போதைப் பொருள் அதிகரிப்பு விவகாரத்தைக் கண்டித்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மாா்ச் 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும். கூட்டணிப் பேச்சு: பாமகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெறுகிா என்று கேட்கிறீா்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெற்றாலும் வெளிப்படையாகத் தெரிவிப்போம். அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி உருவாகும். பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுகவுக்கான கதவு திறந்து இருப்பதாக பாஜக கூறியிருப்பதாகக் கேட்கிறீா்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவெடுத்து அறிவித்துவிட்டோம். எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் பெயா்களை பிரதமா் மோடி புகழ்ந்து பேசியது குறித்து கேட்கிறீா்கள். அவா்கள் இருவரும் தமிழகத்துக்காக உழைத்த தலைவா்கள். அதனால், புகழ்கிறாா் என்றாா் எடப்பாடி பழனிசாமி.