பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வறட்சியில் இருந்து காக்க பணம் செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பகுதியில் பருவமழை தவறியதால், இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே கடும் வறட்சி நிலவி வருகிறது. பாசன நீர் ஆதாரங்கள் வற்றியதால், பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக நெகமம் பகுதியில் நீர்ப் பாசனம் அதிகம் தேவைப்படும் தென்னை மரங்களை காக்க, மாதந் தோறும் ஆயிரக் கணக்கான ரூபாய் தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து நெகமம் காணியாலம் பாளையத்தை சேர்ந்த விவசாயி கந்த வடிவேல் கூறியதாவது: தென்னையில் உயர் கலப்பின ரகங்களுக்கு, உயிர் தண்ணீராக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் ஒரு நாளைக்கு 85 லிட்டர் அளிக்க வேண்டும். நாட்டுரக மரங்களுக்கு 65 லிட்டர் கொடுக்க வேண்டும். வாய்க்கால், குழாய் பாசனம் செய்தால், ஒரு வாரத்துக்கு 250 முதல் 300 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றியாக வேண்டும். கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றியதால், பணம் கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வந்து பாசனம் செய்து வருகிறேன்.
தோப்பில் பொக்லைன் மூலம் குழிவெட்டி, அதை பிளாஸ்டிக் காகிதத்தால் பரப்பி, லாரியில் கொண்டு வரும் தண்ணீரை சேமித்து பயன்படுத்தி வருகிறேன். ஒரு லாரி தண்ணீர், 20 மரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், மாதந் தோறும் ஆயிரக் கணக்கான ரூபாய் தண்ணீருக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த தண்ணீர், மரங்களின் உயிரைக் காக்குமே தவிர, காய்ப் பதற்கு போதாது. விரைவில் கோடை மழை பெய்யும் தென்னை மரங்கள் உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம், என்றார்.