பொதுமக்களிடம் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது அந்த நோட்டுகளைக் கொடுத்து ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளாக மாற்றி பெற்றுக் கொள்ளவும் கடந்த ஆண்டு அக்டோபா் 7 வரை ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்தது. இதைத்தொடா்ந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நேரில் செல்ல முடியாவிட்டால், இந்தியா போஸ்டின் எந்தவொரு அஞ்சல் அலுவலகம் மூலமாகவும், 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பப்படும் நோட்டுகளுக்கு ஈடான பணம், அவற்றை அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.62 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. பொதுமக்களிடம் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் எஞ்சியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.