கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை (மார்ச் 9) கம்போங் செராஸ் பாரு விளையாட்டு மைதானத்தில் பெட்ரோலைத் தெளித்து, வெளிநாட்டுப் பெண்ணைத் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில் புதன்கிழமை (மார்ச் 13) முதல் தேடப்பட்ட இரண்டு வெளிநாட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை (மார்ச் 14) அம்பாங் உள்ள ஒரு வீட்டில் 36 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார். பெயிண்டராக பணிபுரியும் சந்தேக நபர், இன்று முதல் மார்ச் 20 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் வாட்ஸ்அப் செய்தி மூலம் சுருக்கமாக கூறினார்.
முன்னதாக ஏசிபி ஜாம் ஹலீம், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.