சிரச்சேதம் செய்யப்படும் முன் டேவிட் ஹெயின்ஸ்
சிரியாவில் சுமார் 18 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் டேவிட் ஹேய்ன்ஸை, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் சிரச்சேதம் செய்வதைப் போல் காட்டும் வீடியோவை அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமிய அரசு வெளியிட்ட இந்த வீடியோவில், டேவிட் ஹேய்ன்ஸ் போலத் தோற்றமளிக்கும் ஒருவர் மண்டியிட்டு இருக்க, அவரது அருகில் கத்தியுடன் நிற்கும் ஒரு ஜிஹாதி போராளி, ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கில உச்சரிப்புடன், இஸ்லாமிய அரசுக்கு எதிராக குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவளிக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்ததைக் கண்டிக்கிறார்.
இதே வீடியோவில், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மற்றுமொரு பிரிட்டிஷ் பணயக்கைதியையும் கொல்லப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
கேமரன், ஒபாமா கண்டனம்
இந்தக் கொலையை “அப்பட்டமான தீமை” என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் , பதில் நடவடிக்கை குறித்து ஆராய அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.
இந்தக் கொலையை, “காட்டுமிராண்டித்தனமானது” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டித்திருக்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டனுடன் , தோளோடு தோளாக இந்த துயரத்திலும்,அதற்கான பதில் நடவடிக்கையிலும் இணைந்து நிற்கிறது. என்றார் அவர்.
இதைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் உலகுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அழிக்கவும், பரவலான நாடுகளின் கூட்டணி ஒன்றுடன் சேர்ந்து செயல்படப்போவதாக ஒபாமா கூறியிருக்கிறார்.
கடந்த மாதம், இரண்டு அமெரிக்கச் செய்தியாளர்கள் — ஜேம்ஸ் ஃபாலி மற்றும் ஸ்டீவன் ஸோட்லோப்– ஆகியோர் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.