ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான ஹாக்கி போட்டியில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தியது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கியது. இதில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.
எனினும், இன்று முதன் முதலாக நடந்த பதக்க போட்டியான, துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
அதேசமயம், வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் – தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் சீன தைபே அணியை – இந்திய அணி எதிர்கொண்டது. இதில், 5-3 என்ற கணக்கில் வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி, ஆண்கள் பிரிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய நியூசிலாந்து, முதல் கோல் அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து, பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்திய இந்தியாவின் ரூபிந்தர் சிங் அதனை கோலாக மாற்ற, ஆட்டம் 1- 1 என்ற சமநிலை அடைந்தது.
இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் சிங் அபாரமான கோல் ஒன்றை அடிக்க, இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றது. இதனால், 2ம் பாதியில் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. நியூசிலாந்து வீரர்கள் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியாவுக்கு மூன்றாவது கோல் கிடைத்து, 3 – 1 என்று லீடிங் பெற்றது. இறுதியில் ஆட்டம் முடியும் தருவாயில் நியூசிலாந்துக்கு மற்றொரு கோல் கிடைக்க 3-2 என்று ஆட்டம் மேலும் பரபரப்பானது. எனினும், மேற்கொண்டு நியூசிலாந்து கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்ட இந்திய அணி, 3-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
இன்று காலை தொடங்கிய போட்டிகளில், துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி சொதப்பினாலும், வில்வித்தை, ஹாக்கி என அடுத்தடுத்து வெற்றிகளை வசமாக்கி வருகிறது இந்திய அணி. இந்த வெற்றி, மெடலாகவும் உருமாற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம், இன்று காலை நடந்த மற்றொரு ஹாக்கி போட்டியில் ஆசிய சாம்பியனான ஜப்பான் அணியை ஆஸ்திரேலியா 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.