துபாய்: துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
துபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி முதல் சுற்றில் துனிசியாவின் ஸ்கந்தர் மன்சூரி, பாகிஸ்தானின் அய்சாம் உல் ஹக் குரேஷி ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரோகன் போண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 7-6(4) 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதி சுற்றில் போபண்ணா ஜோடி உருகுவேயின் ஏரியல் பெஹர், செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு இந்திய வீரரான யுகி பாம்ப்ரி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் ஜோடி 6-7(6) 6-3, 10-8 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்சின் ஏட்ரியன் மன்னாரினோ ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 4-6, 7-5,1-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லோரென்சோ சோனேகோவிடம் தோல்வி அடைந்தார்.